Thursday, December 13, 2007

தொல்காப்பியம் சுட்டும் செய்தியியல்

நிர்மல்தாசன்

நிகழ்ந்த, நிகழ்கின்ற, நிகழவிருக்கின்ற அனைத்துச் செயல்களையும் ஊடகங்கள் வாயிலாக நாம் அறிகின்றோம். “உலக சதுரங்கப் போட்டியில் ஆனந் வெற்றி” என்பது நாளிதழில் வந்த செய்தி. இது நிகழ்ந்த செயலைப் பற்றியது. நிகழ்கின்ற அரசவைக் கூட்டத்தின் செய்திகளைச் சுடச்சுட அறுசுவை விருந்துப்போல தருகின்றது தொலைக்காட்சி. புயல் அச்சத்தால் நாளை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என்ற செய்தியை வானொலி இன்றே தருகின்றது. புதிய ஊடகங்களாகிய இணையத்தளத்திலும் நம் கையில் அடங்கும் அலைபேசியிலும் பல்வேறு செய்திகள் வருகின்றன.

செய்தியியல் என்பது செய்தியைப்பற்றிய ஆய்வே. செய்தித் துறையில் செய்தியாளர்களுக்கு இன்றியமையாத கடமைகள் உண்டு. பலரை நேர்கண்டு செய்தி அறிவது: அறிந்த செய்திகளை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சுவைப்பட தமிழில் எழுதுவது: எழுதிய செய்திகளை தொகுத்து வழங்குவது: இப்படி எத்தனையோ கடமைகள் நாளுக்கு நாள் செய்தியாளர்களுக்காகவே காத்திருக்கின்றன. இவை எல்லாமே செய்தியியலில் அடங்கும்.

செய்தி என்றால் என்ன? பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்தச் சொல்லின் பொருளை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், கேட்க வேண்டியிருக்கிறது. ஆமாம், செய்தி என்றால் என்ன? செய்தியைச் செய்தியாளரின் கூற்றாகவும், ஊடகங்களின் உள்ளடக்கமாகவும், வாசகர்கள் பெறுகின்றன தகவலாகவும் கருதலாம். இவை மட்டும் தானா செய்தி? உண்மையில் செய்தியென்பது பல பொருள் குறிக்கும் ஒரு சொல்லாகும்.

இனி செய்தியின் பரிமாணங்களைக் காண்போம். செய்தி என்பதும் செய்க என்பதும் ஒன்றே. முன்னது மறைந்த வழக்கு: பின்னது இன்றைய வழக்கு. செய் என்ற வினைச் சொல்லில் இருந்து பிறந்ததே செய்தி என்னும் இன்றைய பெயர்ச் சொல்.

புறநானூறில் ஆலத்தூர் கிழார் யாத்த ‘ஆன் முலை அறுத்த...’ என்று தொடங்கும் செய்யுளில்

செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென

அறம்பா டிற்றே...

என்று புலவர் பாடுகிறார். இதில் செய்தியென்பது செய்த நன்றி அல்லது செய் நன்றியைக் குறிக்கின்ற சொல்லாகும்.

ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியத்தில் ஏழுவிடங்களில் செய்தியெனும் சொல் பல்வேறு பெர்ருள்களில் வருகின்றது. ஒவ்வொன்றாக நாம் காண்போம்.

விரவு வினையைப்பற்றிய சூத்திரத்தில் (வினையியல் சூ. 25) செய்தி என்பது தொழிலைக்குறிக்கின்றது. ‘திரிபு வேறு படூஉஞ் செய்தியவாகி’ என்று வரும் அடியை சேனாவரையர் ‘வேறுபடுந் தொழிலையுடைய....’ என்றே பெர்ருள் தருகிறார்.

எச்சவியலில் ‘அடிமறிச் செய்தி’ எனும் தொடர் (சூ.11), அடிமறிச் செய்யுள் என்று சிறப்பாக வந்திருக்கின்றது. இந்தச் சூத்திரத்தை வைத்துத்தான் முனைவர் நிர்மல் செல்வமணி செய்தியும் செய்யுளும் ஒன்றே என்றார் போலும். இக்கருத்து இடம்பெறும் தொல்காப்பியக் கலையியல் என்ற கட்டுரையில் மாறுபட்ட கருத்தையும் தருகிறார். “செய்தி, செய்கை என்பனவற்றினின்றும் செய்யுள் வேறுபட்டது. அது, உள் என்ற கடநிலை பெற்றுச் சிறப்புப் பொருளைத் தருவது,” என்றுரைக்கிறார். இதில் நாம்பெறும் பாடம் இதுவே: செய்யுள்யாவும் செய்தியாகும்; செய்தியாவும் செய்யுளாகா.

பல்வேறு செய்கைகள் என்ற பொருளில் ‘பல்வேறு செய்தி’ என்ற தொடரை சொல்லதிகாரத்தின் ஈற்றுச் சூத்திரத்தில் பயன்படுத்தியுள்ளார் தொல்காப்பியர் (எச்சவியல் சூ. 67) இந்தச் சூத்திரத்தில் செய்யுள் என்ற சொல்லும், செய்தி என்ற சொல்லும் சந்திக்கின்றன.

“செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும்
மெய்பெறக் கிளந்த எல்லாம்
பல்வேறு செய்தியின் நூல்நெறி பிழையாது
சொல்வரைந்து அறியப் பிரித்தனர் காட்டல்”

தொழில் என்ற பொருளில் வரும் செய்தியை தொல்காப்பியர் அகத்திணையில் கருவெனக் குறிக்கின்றார் (சூ. 18) அதே பொருளில் புறத்தினையிலும் மாசற்ற தொழிலாய் ‘மறுவில் செய்தி’ என்ற தொடர் வந்திருக்கின்றது. (சூ. 20)

சமகாலத்தில் தகவல் என்பதும் செய்தியே. இதே பொருளில் செவிலிக்கு நிகழும் கூற்றைப்பற்றிச் சொல்லுகையில், தொல்காப்பியர்

“கட்டினும் கழங்கினும் வெறிஎன இருவரும்
ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்” (களவியல் சூ. 24)

என்று செப்புகிறார்.

மரபியலில் (சூ. 80),

“மெய் தெறிவகையின் எண்வகை உணவின்
செய்தியும் வரையார் அப்பாலான”

என்று தொல்காப்பியர் கூறுகின்றார். இதில் செய்தல் என்ற பொருளில் செய்தியெனும் சொல் வந்தமை காண்க. இதுவரை செய்தி என்ற சொல்லின் பல்வேறு பொருள்களைக் கண்டோம். இனி, தொல்காப்பியர் செய்தியியலைச் சுட்டுகின்ற முக்கிய சூத்திரத்தைப் பார்ப்போம்:

“வினையே, செய்வது, செயப்படு பொருளே,
நிலனே, காலம், கருவி என்றா
இன்னதற்கு இது பயன் ஆக, என்னும்
அன்ன மரபின் இரண்டொடும் தொகைஇ
ஆயெட்டென்ப தொழில் முதல் நிலையே.”
(வேற்றுமை மயங்கியல் சூ. 29)

“மனிதன் இயற்றும் வினை-தொழில்-செயல் அனைத்திலும் இக்கூறுகளைக் காணலாம்,” என்கின்றார் நிர்மல் செல்வமணி அவர்கள் (தொல்காப்பியக் கலையியல்). வினையே என்பது செயலே: செய்யப்படு பொருளே என்பது செய்தியே. அஃதாவது செய்தி என்பது பொருளைக் குறிக்கின்ற சொல்லாகவும் வரும்.

எந்தப் பொருளையும் செய்தியெனக் கொள்ளலாம். திடப்பொருள் மட்டுமன்றி உரிப்பொருளையும் அவ்வாறே கொள்ளலாம். தொல்காப்பியர் 'முதல் கரு உரிப் பொருள்” என்று தான் சொன்னார். முதல் பொருள் என்றும் கருப்பொருள் என்றும் சொல்லவில்லை. எனவே, முதலும் கருவும் செய்தி ஆகா என்று உணர்தல் வேண்டும்.

மேலும், அதே இயலில் அவர் சொல்வார்: “நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே.” (சூ. 44). இந்தச் சூத்திரத்தில் செய்தியியலைப் பற்றியச் செய்தி பொதிந்திருக்கின்றது.

செய்தி என்பது நிகழ்ந்தது மொழிதல். செய்தித்தாள்களில் வரும் தலையங்கங்களை படித்தோமானால், அவையாவும் ‘நிகழ்ந்ததை கூறி நிலையல்’ என்று அறிவோம். நிகழ்ந்தது கூறல் திணையாகின்றது. நிலையலும் திணையாகின்றது. அஃதாவது செய்தி என்பதும் ஒரு வகையில் திணையே. இதை நிறுவ முன்வைத்த காலைச் சற்று பின்வைப்போம்.

முதலும் கருவும் செய்தி ஆகாவென்று முன்பே பார்த்தோம். சொல்லதிகாரத்தின் முதல் சூத்திரத்தைப் படிப்போம்:

“உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆ இரு திணையின் இசைக்குமன் சொல்லே.”

திணையுள்ளனவற்றை உயர்திணையாகவும், திணையற்றவைகளை அஃறிணையாகவும் பாவிப்பது மரபு. அஃதாவது இயற்கையின் செயல்கள் யாவும் செய்தி ஆகா. அவை இயல்பாக நிகழ்பவை. மனிதர்களின் செயல்கள் மட்டுமே செய்தியாகும், செயற்கையாகும்.

அகத்திணையும் புறத்திணையும் நோக்குங்கால் திணை என்பது செய்தி என்று விளங்கும். சொல்லப் போனால், பொருளதிகாரத்தைச் செய்தியதிகாரம் என்றால் மிகையாகாது.

செயல்யாவும் செய்தி என்றால், செய்யுள் என்ன? செய்யுளியலைக் காண்க. அடியின் சிறப்பே பாட்டாவது போல, செய்தியின் சிறப்பே செய்யுளாகும். அப்படியென்றால், செய்தியாளர்களின் உரைநடைக்குச் சிறப்பில்லையா? உரைநடைக்கு இலக்கணம் உண்டு: சிறப்போ செய்யுளுக்கு மட்டும் உரியது.

பாணர்களுக்கு இருக்கும் சிறப்பு செய்தியாளர்களுக்கு இல்லை. சிறந்த செய்தியாளர்களாவதற்கு தொல்காப்பியத்தைப் படித்தல் அவசியமே. ‘இன்பமும் பொருளும் அறனும்’ என்றும், ‘எல்லா உயிர்க்கும் இன்பம்’ என்றும் தொல்காப்பியர் மொழிகின்றார். திணையென்பது மனிதர்களை முதலோடும் கருவோடும் இணைக்கின்ற வினையே. தொல்காப்பியர் கண்ட இந்த நற்காட்சியை செய்தியாளர்கள் மனதில் நிறுத்தி செய்தியின் இலக்கணமாக கொள்ள வேண்டும்.